அரசியலில் ரஜினியும், கமலும் ஒன்று சேர்ந்து வந்தால் எந்த ஒரு அதிசயமும், அற்புதமும் நிகழாது என்று தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இக்கோரிக்கை உள்பட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர் 6ம் தேதி மாவட்டந்தோறும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
தமிழக அரசு பல்வேறு காரணங்களைக் கூறி, உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட்டு வருகிறது. மாநகராட்சி மேயர் பதவியை மறைமுகமாக தேர்வு செய்ய, அதிமுக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்த அதிமுக அரசுக்கு ஆர்வம் இல்லை.
ரஜினி, கமல் ஆகியோர் ஒன்று சேர்ந்து அரசியலுக்கு வந்தால் அற்புதமும், அதிசயமும் நிகழாது. சினிமாவில் வேண்டுமானால் இருவரும் சேர்ந்து நடித்தால் வெற்றி பெறலாம். ஆனால், அரசியலில் வெற்றி பெற முடியாது. அவர்கள், மக்களால் ஓரங்கட்டப்படுவார்கள்.
எட்டுவழிச்சாலை, ஸ்டெர்லைட் ஆலை க்கு எதிராக ரஜினி குரல் கொடுக்கவில்லை. அவர் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று இதன் மூலம் தெரிகிறது. அவருக்கு காவி வேஷம் பூசிவிட்டனர். இதிலிருந்து அவருக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.