Skip to main content

நடிகர் விவேக்கின் உடலுக்கு இறுதிச்சடங்கு! (படங்கள்)

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று (16.04.2021) சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 04.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

 

அவரின் மறைவுக்கு இந்திய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விவேக்கின் இல்லத்தில் அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன் தொடர்ச்சியாக, நடிகர் விவேக்கின் உடல், அவரது இல்லத்தில் இருந்து மேட்டுக்குப்பம் மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

மேட்டுக்குப்பம் மின்மயானத்தில், நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் 78 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதி மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், காவல்துறை சார்பில் நடிகர் விவேக்கிற்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பின்பு, தகன மேடையில் உள்ள விவேக்கின் உடலுக்கு மகள் தேஜஸ்வினி இறுதிச் சடங்குகளைச் செய்தார். அதைத் தொடர்ந்து, அவரின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

 

நடிகர் விவேக்கின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் அவரது கலை, சமூகச் சேவையைக் கௌரவிக்க காவல்துறை அனுமதியுடன் விவேக்கின் உடலை அரசு தகனம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்