நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு வரும் 7ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிப்பதற்கு சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பதிவுத்துறை அதிகாரியான சேகர் என்பவரை தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்கும் அதிகாரியாக நியமனம் செய்துள்ளது அரசு.
இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட தனி அதிகாரி சேகர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
தயாரிப்பாளர் சங்கத்திற்குள் பிரச்சனைகள் நீடிப்பதால் தனி அதிகாரி நியமித்ததாகவும், பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிட்டால் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்படும் என்றும் அரசுத்தரப்பு விளக்கம் அளித்தது.
இதன் பின்னர், தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் மட்டும் அளித்த ஒரே புகாரின் அடிப்படையில் தனி அதிகாரியை நியமித்தது தவறு என்று விஷால் தரப்பு தெரிவித்தது. மேலும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தது.
விசாரணையை அடுத்து, தமிழக அரசு இது குறித்து மே-7ம் தேதி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது.