நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி அண்மையில் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம் அதுவரை கட்சியினர் கட்சிக் கொடியை முறையாக அனுமதி பெற்று ஏற்றிக் கொண்டாடுங்கள் என விஜய் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செப்.23 ஆம் தேதி அரசியல் கட்சி மாநாடு நடத்துவதற்காக தமிழக வெற்றிக்கழகம் முனைப்புக் காட்டி வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய்க்கு இனி தான் சோதனைகள் இருக்கும் என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''நடிகர் விஜய் சாருக்கு இதுக்கு அப்புறம் தான் நிறைய சோதனை இருக்கு. இதற்கு அப்புறம் அவருடைய பயணத்தில் முட்டுக்கட்டை போடுவதற்கு நிறைய அரசியல்வாதிகள் வேலை செய்வார்கள். இதற்கு அப்புறம் தான் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். உங்களுடைய திறமை இதற்கப்புறம் தான் நிரூபிக்கப்படும்'' என்றார்.
மேலும் கேரள திரையுலகை உலுக்கி வரும் பாலியல் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, ''உண்மையிலேயே இதுபோன்ற புகார் ஊர்ஜிதமானால் அவர்களை விலக்கி வைக்க வேண்டும். ஒரு நடிகராக இருந்தால் மூன்று வருடம் நடிக்க விடாமல் செய்ய வேண்டும். இயக்குநராக இருந்தால் இயக்க விடாமல் செய்ய வேண்டும். தயாரிப்பாளராக இருந்தால் படம் தயாரிக்கக் கூடாது என வைத்தால்தான் அடுத்து வரும் நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் பயப்படுவார்கள். அதேபோல் நடிகைகளும் பாலியல் கொடுமைக்கு உள்ளானால் அடுத்தநாளே போய் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். நடிகர் சங்கத்திலும் புகார் அளிக்கலாம். அப்பொழுதுதான் புகாருக்கு விடை கிடைக்கும். அதை விடுத்து, பத்து வருடத்திற்கு முன்பு நடந்தது, எட்டு வருடத்திற்கு முன்னாடி நடந்தது என்று சொல்லும் பொழுது கேட்பவர்களுக்கு ஒரு கதையாக தான் இருக்குமே தவிர, அதற்கு தீர்வு கிடைக்காது'' என்றார்.