
இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த வேண்டும் என்ற வணிக வரித்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் விஜய் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருந்தது. அதில், “சமூகநீதிக்குப் பாடுபடுவதாகப் பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோவாக இருக்கக் கூடாது” எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்க்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகள் குவிந்துவருகின்றன. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதியின் கருத்தை நீக்கக் கோரி நடிகர் விஜய் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நுழைவு வரி விவகாரத்தில் தனி நீதிபதியின் கருத்தை நீக்கக் கோரி விஜய் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதேபோல் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியத்தின் கருத்து மற்றும் ஒரு லட்சம் அபராதத்தை நீக்கக் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த விஜய் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.