நடிகர் விஜய்க்கு சென்னை போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்துள்ளது தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்தார். சென்னை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள நடிகர் விஜய் காரில் சென்ற நிலையில், அவர் சென்ற காரின் கண்ணாடியில் கருப்பு நிற பிலிம் ஒட்டப்பட்டிருந்தது. அந்தக் காரிலிருந்து நடிகர் விஜய் வெளியே வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
இதுதொடர்பாக பொதுமக்களில் ஒருவர் போக்குவரத்து காவல்துறையின் சமூக வலைத்தள பக்கத்தில் இது தொடர்பான வீடியோ காட்சியை பதிவிட்டு, 'மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் ஏன் நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை மீறி நடிகர் விஜய் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள காரில் வந்துள்ளார். விஐபிகள் மட்டும் காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்ட மோட்டார் வாகனச் சட்டம் அனுமதிக்குமா?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதனடிப்படையில் அவருக்குப் பதிலளிக்கும் வகையில் சென்னை காவல்துறை தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், குறிப்பிட்ட இனோவா காருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு, அபராத ரசீதையும் வெளியிட்டுள்ளது. 'TN 07 CJ 5557' என்ற அந்த வாகனமானது நடிகர் விஜய் பெயரில் இருப்பது தெரிய வந்துள்ளது.