நடிகர் ரித்தீஷ் மனைவி மீது சென்னையைச் சேர்ந்த ஒருவர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை தாராநகரைச் சேர்ந்தவர் கேசவன். இவர் சென்னை பாண்டி பஜார் காவல்நிலைய காவல் ஆய்வாளரிடம் அளித்த புகார் மனுவில்,
கடந்த 10 வருடங்களாக நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷிடம் வேலை பார்த்து வந்தேன். இந்த நிலையில் அவர் எனக்கு நெம்பர் 24, சாம்பசிவம் சாலை, பாண்டி பஜார் என்ற விலாசத்தில் உள்ள வீட்டில் பராமரிப்பு வேலைகளை பார்க்க கடந்த 6 மாதம் முன்பு என்னிடம் வீட்டின் சாவியை கொடுத்தார்.
நானும் பிளம்பர், கார்பென்டர், பெயின்டர், மார்பிள் பாலீஷ் செய்வதற்கு ஆட்களை வைத்து வேலை செய்து வந்தேன். இவ்வாறு பராமரிப்பு வேலை செய்தவற்காக இன்று வரை ரூபாய் நான்கு இலட்சம் வரை தரவேண்டியுள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த மாதம் ரித்தீஷ் காலமடைந்துவிட்டதால் வேலை ஆட்களுக்கு பணம் கொடுக்காததால் அவர்கள் அந்த வீட்டிலேயே தங்கி வந்தனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று இரவு சுமார் 7.35 மணி அளவில் ஐசரிகணேஷ் என்பவர் என்னை கைபேசியில் தொடர்பு கொண்டு அந்த வீட்டின் சாவியை ரித்தீஷின் மனைவியிடம் கொடுத்துவிட வேண்டும் என்றும், தவறினால் நீ உயிரோடு இருக்க மாட்டாய் என்றும் மிரட்டினார். பிறகு நான் சாவியை கொடுத்து விடலாம் என்று அந்த வீட்டிற்கு சென்றபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
பிறகு உள்ளே சென்று பார்த்தபோது ரித்தீஷ் மனைவி மற்றும் பத்திற்கும் மேற்பட்ட அடியாட்கள் உள்ளே இருந்தனர். அவர்கள் என்னை தாக்க இரும்பு கம்பியால் முயன்றும், ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி என்னையும், எனது மனைவியையும் அசிங்கமான வார்த்தைகளால் பேசியும் தாக்க முயன்றனர்.
ஜோதீஷ்வரி எனது மனைவியை அவருடைய கணவருடன் சம்மந்தப்படுத்தி அசிங்கமாக சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டியும், என்னை அசிங்கப்படுத்தி தாக்க வந்தனர். பணம் எதுவும் கொடுக்க முடியாது, மீறிக் கேட்டால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொளுத்தி கொன்று விடுவோம் என்றும் மிரட்டினார்கள். இந்த மனுவை ஏற்றுக்கொண்டு எனக்கு சேர வேண்டிய பணம் ரூபாய் நான்கு இலட்சத்தை பெற்றுத்தர வேண்டும். எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கும் என் குடும்பத்தாருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.