


திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்கிற தலைப்பில் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இந்த கண்காட்சியை திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
இதனை நடிகர் பிரபு இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ், அப்துல் சமத், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பிரபு, ''நான் சிறுவயது முதல் மு.க.ஸ்டாலினோடு பழகி வருகிறேன். அவருடைய கடின உழைப்பு என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும். படிப்படியாக உயர்ந்து இன்று முதல்வர் என்ற இடத்திற்கு வந்துள்ளார். இந்த புகைப்பட கண்காட்சியில் அவர் திமுகவிற்காக செய்த பணியும் அதனால் அவர் இளைஞர் அணி தலைவராகவும் மேயராகவும் இன்று முதல்வராகவும் உயர்ந்துள்ளார். அதேபோல் அவர் மக்களுக்காக எவ்வளவு பணி மற்றும் தியாகங்களை செய்துள்ளார் என்பதற்கு இந்த கண்காட்சியே சான்றாக உள்ளது. திருச்சி என்பது நம்ம ஊரு. எங்க அய்யா, அன்பில் தர்மலிங்கம் அவர்களோடு நான் இங்கு வாழ்ந்திருக்கிறேன் வளர்ந்திருக்கிறேன். எனக்கு இந்த ஊரில் நிறைய உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். எங்க ஐயா உறவினர்கள் எவ்வளவு முக்கியமோ அதற்கு இணையாக நண்பர்களும் முக்கியம் என்று கூறுவார். எங்கள் அண்ணன் மு.க.ஸ்டாலின் இன்று எப்படி தமிழக மக்களுக்கு பல நன்மைகளை தொடர்ந்து செய்து வருகிறாரோ அதேபோல் இனிவரும் கூடிய காலங்களிலும் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். அவருடைய உடல் நலம் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று எங்களுடைய ஐயாவிடமும், கலைஞர் அவர்களிடமும் வேண்டிக்கொள்கிறேன்''என்றார்.
பாலக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ஒரு சிலை திறப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ''எங்கள் அண்ணன் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் இருக்கிறார்கள். அந்த சிலை திறப்பதில் ஒரு சில அடிப்படை பிரச்சனைகள் இருப்பதால் விரைவில் அவர்கள் அதை திறந்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்'' என்றார்.