நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார், “எனது அன்பு நண்பரும், மிகச்சிறந்த மனிதரும், தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமும், சிறந்த விரிவுரையாளருமான மயில்சாமி அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி பேரதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அளிக்கிறது. அன்பு நண்பர் மயில்சாமி அவர்களைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கலைத்துறையினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “நகைச்சுவை நடிகர் மயில்சாமி உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர். விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகளைச் செய்துள்ளார். மேலும், சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் மயில்சாமியின் உடல் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.