சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனராக இருந்த, 55 வயது மருத்துவர் மற்றும் ஆந்திரமாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "உயிரை கொன்று குவிக்கும் கரோனா கூட சாதி, மதம் பார்ப்பதில்லை. ஆனால், நாமோ, நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல் கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள்" என பதிவிட்டுள்ளார்.