பள்ளிக்கு செல்போன் எடுத்துவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் அருகேயுள்ள தொரப்பாடியில் மேல்நிலை அரசு பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. கடந்த சனிக்கிழமையன்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வகுப்புகள் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டிற்கு செல்லாத சில மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாத சமயத்தை பயன்படுத்தி வகுப்பறையில் இருந்த இரும்பு மேசைகளை சேதப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய 10 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
இந்த 10 மாணவர்களும் மே 5ஆம் தேதிவரை பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இனி பள்ளிக்கு செல்போன் எடுத்துவர தடை விதித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். மேலும், மறைத்து வைத்து எடுத்துவந்தால் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.