சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திங்கள் கிழமை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சர்க்கரைத்துறை ஆணையர் ஹர்மந்தர் சிங், கூடுதல் ஆணையர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இதற்கு முன்னிலை வகித்தனர். 2021-22 கரும்பு அரவைப்பருவம் நல்ல முறையில் இயங்குவதற்கும், சர்க்கரை ஆலை கட்டுமானத்தை உயர்த்துவது உள்ளிட்ட அனைத்து பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் நடந்த விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது; “தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார். அதன் அடிப்படையில் சேத்தியத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 15 மெகாவாட் மின் உற்பத்தி விரைவில் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், எத்தனால் உற்பத்தி நிலையமும் விரைவில் அமைக்கப்படும்” என்றார். விவசாயிகள் பலர் பல்வேறு கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “கரும்பு விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். கரும்புக்குக் கூடுதல் விலை அளிப்பதைத் தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் அறிவித்தார். அதை நிச்சயம் நிறைவேற்றுவார். கடந்த ஆட்சியில் இந்த ஆலையில் போதிய பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்தது. அதை சரி செய்வதற்காகவே தற்போது சர்க்கரைத் துறை ஆணையர் நேரில் வந்து ஆய்வு நடத்தியுள்ளார். இந்த சர்க்கரை ஆலையின் கட்டுமான பிழி திறன் 7.54 ஆக இருக்கிறது. இதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கரும்பு விவசாயத்தை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த சர்க்கரை ஆலையில் எத்தனால் பிளான்ட் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மின்சார உற்பத்திக்கான பணிகள் நடந்தது. அதன் பிறகு ஆட்சி மாற்றத்தால் அது முடங்கிவிட்டது. தற்போது, அதை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம் கிடைக்கும். தமிழக முதல்வர் அறிவித்த வேளாண்மைக்கான தனி பட்ஜெட் மக்களிடமும் விவசாயிகளிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக சர்க்கரை ஆலையில் சர்க்கரைத் துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சென்று பார்வையிட்டனர். அப்போது ஆலையின் அரவை இயந்திரம், அதன் பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித் சிங், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், தலைமை சர்க்கரை பொறியாளர் பிரபாகரன், சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநர் சுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள், சர்க்கரை ஆலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.