தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் நல சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
வல்வில் ஓரி பற்றிய போலி வரலாற்று புத்தகத்தை வெளியிட்டது மட்டுமல்லாமல் மக்கள் வரிப்பணத்தைக் கூட்டு சதி செய்து ஏமாற்றியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட எடப்பாடி பழனிசாமி, நந்தர் ஆகிய இருவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக் கோரி கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜ் கவுண்டர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “இன்று நாங்கள் டிஜிபி அவர்களிடம் மனு கொடுத்திருக்கிறோம். காரணம் என்னவென்றால், கடையெழு வள்ளல்களில் ஒருவரான மாமன்னர் வல்வில் ஓரிக்கு நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை செம்மேட்டில் 06.09.1975 அன்று கலைஞர் சிலை அமைத்து திறந்துவைத்தார். அன்றுமுதல் ஆடி 17, ஆடி 18 ஆகிய தினங்களில் அரசு விழாவாக இன்றுவரை நடைபெற்று வருகிறது. மேலும், அங்கு அமைந்துள்ள சிலையில், வல்வில் ஓரி வேட்டுக்கவுண்டர் என்று புறநானூறு பாடலைக்கொண்டு கல்வெட்டு வைத்துள்ளதும் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தான் சார்ந்த கொங்கு வேளாளர் சமுதாய ஓட்டு வங்கியைப் பெறுவதற்காக நந்தர் என்பவர் மூலம் தமிழ்நாட்டின் மூத்த பூர்வக்குடி மக்களான வேட்டுவக்கவுண்டர்களின் மாமன்னரை கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர் என பொய்யான வரலாற்றைக் கட்டுக்கதையாக எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை 2015ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக தேர்வு செய்து, நந்தரின் ‘கொங்கு பெருமகன் வல்வில் ஓரி’ என்ற அந்நூலுக்கு ரூ. 30,000 பரிசுத் தொகையும் பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பித்துள்ளார். மக்கள் வரிப்பணத்தைக் கூட்டு சதி செய்து வீணடித்துள்ளார்கள்.
மேலும், இந்தப் புத்தகமானது இதுவரையிலும் எங்கும் வெளியிடப்படவில்லை. ஓரிரு புத்தகங்கள் மட்டும் அச்சடித்துக்கொண்டு அவர்களது அரசியல் அதிகாரத்தில் நேரடியாக சிறந்த நூலுக்கான விருதானது 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரே இல்லை. எனவே இந்தப் பொய்யான நூலை எழுதுவதற்கு தூண்டுதலாக இருந்த எடப்பாடி பழனிசாமி, நூலாசிரியர் நந்தர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.