தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 404 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சென்ற ஆண்டு டிசம்பர் முதல் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 1.0 மற்றும் 2.0 போன்ற அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளில் 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 25,295 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக கஞ்சா வேட்டை 3.0 கடந்த டிச. 12 ஆம் தேதி துவங்கப்பட்டது. இதில் மூன்று நாட்களில் 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 15 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இனி வரும் காலங்களில், கஞ்சா கடத்தும் குற்றச்செயலின் மூலம் கஞ்சா கடத்துபவர்கள் சம்பாதிக்கும் அனைத்துச் சொத்துகளும் முடக்கப்படும் என்றும் காவல்துறையின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.