வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே அல்லேரி பலாமரத்து ஓடை வனப்பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரியப்பெரிய டிரம்களில் ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சென்று சோதனை செய்தனர். சோதனையில் கள்ளச்சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் ஊறல், 200 லிட்டர் கள்ளச்சாராயம் முட்புதர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட அனைத்தையும் காவல்துறையினர் கீழே கொட்டி அழித்தனர்.