அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் வசதிகள் இன்றி பல்லாயிரக்கணக்கில் கரோனா பாதித்த மக்கள் அல்லல்படுவதையும், படுக்கை வசதியின்றி தவிப்பதையும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழப்பதையும் அறிந்து ஆற்றொனாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைகிறேன்.
மக்களைக் காக்கின்ற பெரும் பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருப்பதால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்களின் விலைமதிப்பில்லா இன்னுயிரை பாதுகாத்திடும் வகையில், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும், போதிய ஆக்சிஜன் கிடைக்கவும், தடுப்பு மருந்துகள் கிடைக்கவும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.