வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளான மாடுகளை மக்கள் இரவு நேரங்களில் வீதிகளிலேயே விட்டுவிடுவதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளால் சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில், சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சி செயல் அலுவலர் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ‘அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில் மாடுகள் அதிகமாக சுற்றித் திரிகிறது. இதனால் சாலை விபத்துகள் நேர்கிறது. மேலும், குடியிருப்பு பகுதிகளில் பன்றிகளும் சுற்றிவருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக பேரூராட்சிக்குப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே மாடுகள் மற்றும் பன்றிகளைப் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மற்றும் பொது இடங்களில் சுற்றித் திரிய அதன் உரிமையாளர்கள் விடக் கூடாது. இதை மீறி செயல்பட்டால் மாடுகள், பன்றிகள் பேரூராட்சி துறையினரால் பிடிக்கப்பட்டு கால்நடை பராமரிப்பு மையங்களில் ஒப்படைக்கப்படும். மேலும், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.