விக்கிரவாண்டி பகுதியில் இருந்து விழுப்புரத்துக்கு அரசு பேருந்து ஒன்று கடந்த 22ஆம் தேதி, பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது, அந்தப் பேருந்து பை பாஸ் வழியாக செல்லும் போது அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாமல் புறப்பட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, போக்குவரத்துத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் பேரில், பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாத அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘22.04.2024 அன்று விழுப்புரம் கோட்டம் விழுப்புரம் கிளை 2-ஐ சார்ந்த டிஎன்32/ என்.2218 தடம் எண்.TIF விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் வரும்பொழுது சுமார் 8.00 மணியளவில் விழுப்புரம் பைபாஸ் அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண்பயணிகள் கையைக் காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக ஊடகத்தின் வாயிலாக புகார் செய்தி வெளிவந்தது.
அதன் அடிப்படையில், இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள விழுப்புரம் மண்டல பொது மேலாளர் உத்தரவின்படி அப்பேருந்தில் பணியாற்றிய ஓட்டுநர் ஆறுமுகம், தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், நடத்துநர் தேவராசு பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.