சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஒரு தலைமை நீதிபதி மற்றும் 65 நீதிபதிகள் என மொத்தம் 66 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். தற்போது தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா நாளை (23.05.2024) பணி ஓய்வு பெறுகிறார். தலைமை நீதிபதி கங்காபூர்வாலா சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி நியமிக்கப்பட்டு, மே 29 ஆம் தேதி அன்று பதவியேற்றார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ஆர். மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர். மகாதேவன் 24 ஆம் தேதி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதியாக பதவியேற்க உள்ள நீதிபதி ஆர். மகாதேவன் சென்னையில் கடந்த 1963 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி (10.06.1963) பிறந்தவர் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து தனது சட்டப் பட்டப்படிப்பை முடித்தார்.
இவர் மறைமுக வரிகள், சுங்கம் மற்றும் மத்திய கலால் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். சிவில் மற்றும் கிரிமினல் மற்றும் ரிட் தரப்புகளில் 25 ஆண்டுகள் வழக்கறிஞராக பணி அனுபவம் பெற்றவர். மேலும் வரிகள் தொடர்பான விவகாரங்களில் தமிழக அரசின் கூடுதல் அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். அதோடு மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராகவும், இந்திய அரசின் மூத்த வழக்கறிஞராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை நடத்தியுள்ளார். அதன் பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விரைவில் நிரந்த தலைமை நிதிபதி நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.