ஜூலை ஒன்றான நேற்று முதல் நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
நேற்று முதன் முதலாக டெல்லியில் பாதசாரியில் கடை வைத்திருந்த நபர் மீது பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் முதன்முறையாக இளைஞர் மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் வீட்டுக்கு அருகில் உள்ள பெண் குளித்துக்கொண்டிருந்ததை வீடியோ எடுத்த புகாரில் 'பாரதிய நியாய சன்ஹீதா' சட்டத்தின் படி போலீசார் கைது செய்துள்ளனர். சாரதி என்ற அந்த நபருக்கு பழைய சட்டப்பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல், அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய சட்ட பிரிவிலும் அதே தண்டனை குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இருப்பினும் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து தண்டனை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.