விருதுநகர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் மொத்தம் 14 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள ரெங்காபாளையத்தில் சுந்தரமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான கனிஷ்கர் என்ற பெயரில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று மதியம் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை சோதனை செய்து வந்தனர். அப்போது வெடி விபத்து ஏற்பட்டது.
அதேபோல் சிவகாசியில் கிச்சநாயக்கன்பட்டி பகுதியிலும் பட்டாசு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது. இப்படி ஒரே நாளில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் 14 பேர் மொத்தம் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்குத் தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த விபத்து சம்பவத்திற்கு பாமக ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழு நலம் பெற என விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கத் தமிழக அரசு முன்வர வேண்டும்.
அண்மைக் காலங்களில் பட்டாசு ஆலைகள் மற்றும் வெடி ஆலைகளில் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. வாரத்திற்கு ஒரு விபத்து என்பது வாடிக்கையாகிவிட்டது. பட்டாசு ஆலைகள் தொடர்பான பாதுகாப்பு விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதது தான் இத்தகைய விபத்துக்கள் அதிகரிப்பதற்கான காரணம் ஆகும். பட்டாசு ஆலை பாதுகாப்பு விதிகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி இத்தகைய விபத்துகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.