சேலத்தில் நடந்த சாலை விபத்தில் தந்தை, மகன் உள்பட நான்கு பேர் பரிதாபமாக இறந்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (26). கொண்டலாம்பட்டி அருகே உள்ள நாட்டாமங்கலத்தில் மாட்டிறைச்சி கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி பிரபா. இவர்களுக்கு அகஸ்தியா, பீமாராவ் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர்.
இறைச்சிக் கடைக்காக கஞ்சநாய்க்கன்பட்டியில் மாடு ஒன்றை வாங்கிய ரமேஷ், சனிக்கிழமை இரவு (மே 25) நாட்டாமங்கலத்தில் உள்ள தனது கடைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தார்.
கஞ்சநாய்க்கன்பட்டி முஸ்லிம் தெருவைச் சேர்ந்த சாதிக்பாஷா (46) என்பவருடைய சரக்கு ஆட்டோவில் மாட்டினை ஏற்றினார். அப்போது சாதிக்பாஷாவின் மகன் ரஹமது பாஷா (16), ரமேஷின் உறவினர் பாலு (30) ஆகியோர் அவர்களுடன் ஆட்டோவில் ஏறினர். நள்ளிரவு 12.30 மணியளவில் கந்தம்பட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காற்றாலைக்குத் தேவையான ராட்சத இறக்கைகளை ஏற்றிக்கொண்டு ஒரு டாரஸ் லாரி மெதுவாக மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
அதைப் பின்தொடர்ந்து தண்ணீர் டேங்கர் லாரி, காலி பாட்டில்கள் ஏற்றிவந்த லாரி, ரமேஷ் சென்ற சரக்கு ஆட்டோ மற்றும் ஒரு லாரி என அடுத்தடுத்து அணிவகுத்துச் சென்றன. இந்நிலையில் சரக்கு ஆட்டோவுக்கு பின்னால் வந்த லாரி, திடீரென்று சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் நிலைகுலைந்த சரக்கு ஆட்டோ முன்னால் சென்று கொண்டிருந்த லாரி, தண்ணீர் டேங்கர் லாரி ஆகியவற்றின் மீதும் மோதியது.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த சாதிக்பாஷாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே சாதிக்பாஷாவும் இறந்தார்.
வாகன இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சடலங்களைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் கந்தம்பட்டி மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்தை நெரிசலை சீர் செய்தனர்.