விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் 15 லட்சம் மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து செல்ஃபோன், கம்ப்யூட்டர், ஏ.டி.எம். கார்டுகளையும் பறிமுதல் செய்தனர். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் ஜம்புலிபுத்தூரில் வசிக்கும் மலைச்சாமி மனைவி சாரதா. பட்டதாரியான இவர், வேலை தேடிவருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது அலைபேசிக்கு வேலை வேண்டுமா என எஸ்.எம்.எஸ். வந்தது. இதை நம்பி கல்வித் தகுதி விவரங்களை சாரதா அனுப்பினார். அவரை தொடர்புகொண்டவர், “டெல்லி ஏர்போர்ட்டில் வேலை செய்கிறேன். இங்கே கிரவுண்ட் ஹேண்ட்லிங் பணிக்குத் தேர்வாகியுள்ளீர்கள். முன்பணமாக ரூ. 2,550ஐ வங்கிக் கணக்குக்கு அனுப்புங்கள்” என்றார். அதைத் தொடர்ந்து சாரதா பணம் அனுப்பினார்.
பிறகு அசோக், விநாயகமூர்த்தி, ராஜாராம் என்ற பெயர்களில் பேசியவர்கள் பயிற்சி கட்டணம், தங்கும் வசதி, தொழில்நுட்பக் கருவி பெறுவது, சம்பள கணக்கு துவக்கம் எனக் கூறி பணம் கேட்டுள்ளனர். சாரதா பல தவணைகளில் 15 லட்சத்து 76 ஆயிரத்து 425ரூபாய் வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார். நீண்ட நாள் ஆகியும் வேலை கிடைக்காததால் மோசடி என்பதை உணர்ந்த சாரதா, தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கடந்த ஜூன் 16ஆம் தேதி ஆன்லைனில் புகார் செய்தார். அலை பேசி எண்கள், வங்கிக் கணக்கு விவரங்களை வைத்து போலீசார் விசாரித்தனர். போடி டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் எஸ்.ஐ.கள் சுல்தான், பாஷா, திவான், மைதீன், சிறப்பு எஸ்.ஐ. துரைராஜ், மணிகண்டன் உள்பட 11 போலீசார் டெல்லி சென்றனர்.
அங்கு சகுர்பூரில் ஊட்டியைச் சேர்ந்த கோவிந்தை பிடித்து விசாரித்தனர். அவர் நேதாஜி சுபாஷ் தினேஷ் என்ற இடத்தில் செயல்படும் கால் சென்டர் நடத்தும் விஜய் ராமச்சந்திரனை அடையாளம் காட்டினர். அங்கு போலி வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்பட்டது தெரிந்தது. அங்கிருந்த 31 தொலைபேசிகள், லேப்டாப், கம்ப்யூட்டர், பிரிண்டர், ஏடிஎம் கார்டுகள், சிம்கார்டுகள், போலி நியமன உத்தரவுகள் என 50 ஆயிரம் பறிமுதல் செய்தனர். கோவிந்த், விஜய் ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்து தேனிக்கு அழைத்துவந்தனர். விஜய் ராமச்சந்திரனுக்கு நாமக்கல் பூர்விகம்; இரு தலைமுறைகளாக டெல்லியில் வசிக்கின்றனர் .
நன்கு தமிழ் பேசும் இவர்கள், தொலைபேசி இணையம் மூலம் போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அனுப்பி தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் பலரிடம் கோடிக்கணக்கான மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மூவரையும் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமாக பத்திரிகையாளர்களிடம் தேனி எஸ்.பி. பிரவீன் கூறும்போது, “பொது மக்கள் இதுபோன்ற போலி நிறுவனங்களை நம்பி விவரங்களை அளிக்க வேண்டாம். வேலை வழங்கும் பெரிய நிறுவனங்கள் பணம் வசூலிப்பதில்லை. இணையதள மோசடியில் ஏமாற வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். போலி அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.கள் வந்தால் உடனடியாக எங்களுக்குப் புகார் அளிக்கலாம்” என்று கூறினார்.