ஐடி பெண் ஊழியர் ஒருவர் சாலையில் உள்ள பள்ளத்தினால் ஏற்பட்ட விபத்தில் தலை சிதறி உயிரிழந்த நிலையில் உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் பொழுது தலை இல்லாததால் தலைப்பகுதியில் அவருடைய புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் அரிசி பெரியாங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் நித்யா. இவருடைய தோழி ஹரிணி. இவர்கள் இருவரும் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். கடந்த ஏழாம் தேதி நள்ளிரவு பல்லாவரத்தில் இருந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பரங்கிமலை வேளச்சேரி உள்வட்டச் சாலை பகுதியில் தில்லைகங்கா நகர் சுரங்கப்பாதை பகுதியில் செல்லும் பொழுது சிமெண்ட் சாலையில் கழிவுநீர் தேங்கி இருந்தது. அப்பொழுது பிளவுபட்ட பள்ளம் சாலையில் இருந்தது. இதில் ஸ்கூட்டர் வழுக்கியதில் இருவரும் கீழே விழுந்தனர்.
அப்போது பின்புறமாக வந்த மினி லாரி ஒன்று நித்யாவின் தலை மீது ஏறியது. நித்யா தலைக்கவசம் அணிந்திருந்த போதிலும் லாரி சக்கரம் தலை மீது ஏறியதால் ஹெல்மெட் கழண்டு ஓடியது. இதனால் நித்யாவின் தலை முழுவதுமாக சிதைந்தது. சம்பவ இடத்திலேயே நித்யா துடிதுடித்து உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டி வந்த ஹரிணி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் நித்யாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய மினி லாரி ஓட்டுநர் குமார் என்பவரை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர். உடற்கூறு ஆய்வுக்கு பிறகு பெண்ணின் உடல் பெண்ணின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் அரிசி பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு காத்திருந்த அவருடைய உறவினர்கள் கதறி அழுதனர். தலை சிதறி உயிரிழந்ததால் அவருடைய தலை உடலில் இல்லாமல் போனது. இதனால் அவருடைய தலைக்கு பதிலாக அந்த இடத்தில் அவருடைய புகைப்படத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதை வெள்ளை பூசணிக்காயில் வைத்து கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.