புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஐயப்ப பக்தர்கள் சென்ற சுற்றுலா வேனும், கண்டெய்னர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயத்துடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 15 பேர், ஐய்யப்ன் கோயிலுக்கு சென்று ஊருக்கு திரும்பும் வழியில் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த பிறகு தெலுங்கானாவுக்கு புதுக்கோட்டை வழியாக சுற்றுலா வேனில் திரும்பி கொண்டிருந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், வேன் மீது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதியது.
இந்த கோர விபத்தில் சம்பவத்தில் வேன் டிரைவர் மற்றும் தெலுங்கானா நாசபூர் மாவட்டம், காதிபேட், மெதக் பகுதியை சேர்ந்த நாகராஜ் (35), மகேஷ் (28), குமார் (22), ஷாம், பிரவின், கிருஷ்ணா, சாய், ஆஞ்சநேயலு, சுரேஷ் ஆகிய 10 பேர் சம்பவ இடத்திலும் மருத்தவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். மேலும் அந்த வேனில் சென்ற 5 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை திருமயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மீட்பு படையினர் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையான பிறகு திருமயம் பகுதியில் இதே போல அடிக்கடி விபத்துகள் நடப்பதால் விபத்துகளை தடுக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.