வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்திட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பட்டியல் இனத்தோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக இயற்றப்பட்டச் சட்டத்தை மாநில அரசுகள் சரிவர நடைமுறைப்படுத்துவதில்லை. இந்நிலையில் அந்த சட்டத்தையே முடக்கும் விதமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டுமெனவும் வலியுறுத்தி எதிர்வரும் 28.3.2018 அன்று காலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
வன்கொடுமை தடுப்புச்சட்டம் பலவீனமாக இருக்கிறது என்பதால் தான் அதை வலுப்படுத்துவதற்காக திருத்தச் சட்டம் ஒன்று தற்போதைய பாஜக அரசால் இயற்றப்பட்டது. இந்நிலையில் சாதிவெறி அமைப்புகள் அந்த சட்டத்தை எதிர்த்துக் குரலெழுப்பி வந்தன. அவை என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்தனவோ அவற்றையெல்லாம் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்திருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதி வெறியர்களுக்கு இந்த தீர்ப்பு உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது.
இதனால் எஸ்சி/ எஸ்டி மக்கள்மீதான தாக்குதல்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தத் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்துக்கும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் குறிக்கோளுக்கும் எதிராக அமைந்துள்ளது. எனவே, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மத்திய அரசு விரிவான அமர்வுக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும். எதிர்வரும் காலங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகாமல் செய்வதற்கு அதை அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.