திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் மனைவி சூரியகலாவுக்கு (37). சூரியகலா குறைந்த அளவு காது மற்றும் வாய் பேச முடியாதவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே சூரிய கலா, சுந்தர் தம்பதியினருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கருத்தடை செய்வதற்காக வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதியம் சூரிய கலா அடையாளம் தெரியாத பெண்ணோடு உணவு உண்டதாகவும், பின்னர் மயக்கமடைந்து விட்ட நிலையில் விழித்து பார்த்த போது குழந்தை காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் விசாரித்தும் குழந்தை கிடைக்காததால் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அதில் மொட்டை தலையுடன் கூடிய பெண் குழந்தையை தூங்கிச்செல்வது பதிவாகியுள்ளது. உடனடியாக வேலூர் மாவட்ட காவல்துறை குழந்தையை கண்டுபிடிக்க உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) பிரசன்ன குமார் தலைமையில், வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு மேற்பார்வையில் 4 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். பிரசவ வார்டில் குழந்தையை கடத்திச்சென்ற பெண் விட்டுப் போன பொருட்களை ஆராய்ந்த, அந்த பெண்ணிண் பெயர் பத்மா என்றும் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண்ணிண் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் இரவு காவலர்களிடமும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து வேலூர் மாவட்ட காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது குழந்தையை கடத்திச் சென்ற பெண் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பிடிபட்டுள்ளார். அவரிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்ட நிலையில், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பத்மா என்ற பெண்ணை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர், மருத்துவமனையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குழந்தையை பெண் ஒருவர் கடத்திக்கொண்டு வேக வேகமாக மருத்துவமனையில் இருந்து வெளியே செல்வது பதிவாகி இருந்தது. தொடர்ச்சியாக ஆய்வு செய்தபோது குழந்தையை கடத்தி சென்ற பெண்மணி திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறி தப்பியது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்மணி பயணித்த வழித்தடங்களில் உள்ள அண்டை மாவட்டங்கள் உட்பட சுமார் 500 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை காவல்துறையினர் தொடர் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு கண்காணிப்பு கேமராவின் தொடர்ச்சியை வைத்து இறுதியாக ( 8 மணி நேரத்தில்) காஞ்சிபுரத்தில் இருப்பது தெரியவந்து குழந்தை மற்றும் குழந்தையை கடத்திய ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த பத்மா பெண்ணையும் கைது செய்து பச்சிளம் ஆண் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண் காவல்துறையினரிடம் சிக்காமல் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பின்னர் பேருந்து மூலம் திருவண்ணாமலை சென்று அங்கிருந்து வந்தவாசி வழியாக காஞ்சிபுரம் சென்றது தெரியவந்துள்ளது. குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண் மிகத் தெளிவாக திட்டமிட்டு குழந்தையை கடத்தி சென்றதும், காஞ்சிபுரத்தில் அவரது கணவர் சுற்றித் தெரிந்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இவர்கள் தொடர் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்களா அல்லது குழந்தை கடத்தல் கும்பலாக செயல்படுபவர்களா என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தை கடத்தப்பட்ட அடுத்த எட்டு மணி நேரத்திற்குள்ளாகவே காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு குழந்தையை மீட்டுள்ளது பாராட்டை பெற்றுள்ளது. கடத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை மேற்கொண்டு பத்திரமாக குழந்தையை மீட்டுக் கொடுத்த வேலூர் மாவட்ட காவல்துறைக்கு குழந்தையின் உறவினர்கள் மனதார நன்றி தெரிவித்தனர்.
இதுக்குறித்து வேலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ( பொறுப்பு ) கிரன் ஸ்ருதி, வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, ஏஎஸ்பி, தாலுக்கா காவல் ஆய்வாளர் என 4 பேர் தலைமையில் நான்கு தனி படைகள் அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் குழந்தையை கடத்தி சென்ற பெண்மணி விட்டு சென்ற பொருளிலிருந்து அவரது பெயர், முகவரியை கண்டறிந்தோம். அவர் குழந்தையின் தாயுடன் இரண்டு நாட்கள் சகஜமாக பழகி வந்துள்ளார்.
விசாரணையில் குழந்தையை கடத்திய பெண் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பத்மா என்பது தெரிய வந்தது. உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அவரின் புகைப்படத்தை எடுத்து ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்து இரவு ரோந்து காவலர்களிடம் கொடுக்கப்பட்டு அனைத்து பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்களில் தேடுதல் வேட்டையை தீவிர படுத்தினோம். அப்போது காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் பெண் இருப்பதாக தகவல் கிடைத்தது அதனை உறுதி செய்த பிறகு குழந்தையை கடத்தி சென்ற பத்மா என்ற பெண்மணியை கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளோம், முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இருவரும் ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இந்தப் பெண்ணோடு பிடிபட்டவர் இரண்டாவது கணவர் என்றும் அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லாததும் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.