தமிழகத்தில் 06.04.2021 அன்று சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நிறைவடைந்தது. இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அப்போது வேளச்சேரியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டியில் தூக்கிச் சென்ற நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரங்கள் பழுதடைந்த வாக்கு இயந்திரங்கள் எனத் தேர்தல் ஆணையம் சார்பில், முதலில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர் நடந்த தீவிர விசாரணையில், அந்த இயந்திரம் கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் செயல்பாட்டில் இருந்ததும், அதில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது. அதனால் வேளச்சேரி தொகுதியில் அந்த 92வது வாக்குச்சாவடியில் மட்டும் ஏப்ரல் 17ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 7 மணிக்கு அந்த 92வது வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு துவங்கியது. அப்பகுதியினரும் ஆர்வமாக காலை முதலே வரிசையில் நின்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்துவருகின்றனர். முன்னதாக சென்னை தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி கமிஷ்னருமான பிரகாஷ் தேர்தல் நடைபெறும் பூத்தில் ஆய்வுசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.