தென்காசி மாவட்டத்தின் கடையம் அருகில் உள்ள பால்வண்ணநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவபுத்திரன். இவருக்கும் லட்சுமி தேவி என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்தச் சூழலில், லட்சுமிதேவி நேற்று முன்தினம் (21.04.2021) அருகிலுள்ள தோரண மலைமுருகன் கோவிலுக்குச் சென்று வருவதாக உறவினர்களிடம் சொன்னவர், தன் 7 வயது இளையமகள் மனிஷாவை மட்டும் அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்.
மாலை நேரம் சென்றும் வெகு நேரம்வரை வீடு திரும்பாததால், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அப்போதும் அவர்கள் கிடைக்கவில்லை. தொடர்ந்து தோரணமலைப் பகுதியில் தேடியபோது மலையின் கீழே லட்சுமி தேவி, மனிஷா இருவரின் உடல்கள் கிடந்ததைப் பார்த்து ஆடிப்போனார்கள். தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த கடையம் ஆய்வாளர் ரகுராஜன், எஸ்.ஐ. சரசையன் மற்றும் தென்காசி தீயணைப்பு படைவீரர்கள் உடல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
800 அடி ஆழத்திற்குக் கீழே கிடந்த இருவரின் உடல்களையும் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பே மீட்டனர். அவர்களின் உடல்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்த போலீசார், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். அதில், லட்சுமி தேவியின் தந்தை பூவையா கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். அன்றிலிருந்தே மனம் பேதலித்த நிலையில் இருந்திருக்கிறார் லட்சுமி தேவி. தந்தை இறந்த சோகத்தில், வீடு சரியில்லை; குடும்பத்திற்கு நேரம் சரியில்லை; மாற வேண்டும் என்று கூறி வந்தவர், பின்பு ஒரு மாதமாக அருகிலுள்ள கானாவூரில் வீடு மாறி இருந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் தோரணமலை கோவிலுக்குச் செல்வதாகச் சொன்ன லட்சுமி தேவி, மகளுடன் மலையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரிய வந்திருக்கிறது. மேலும், கடையம் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தொடர்ந்து விசாரித்து வருகிறார். தாய், மகள் தற்கொலை சம்பவம் கடையம் பகுதியில் அதிர்வைக் கிளப்பியிருக்கிறது.