பிரதமர் கிஸான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் சுமார் 14 மாவட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மோசடி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் வருவாய்த்துறை வேளாண்துறை அதிகாரிகள் அடங்கிய ஆய்வு குழு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
இந்த முறைகேடு தொடர்பாக வல்லம் அலுவலர்கள் இரண்டு பேர், ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து வேளாண் இயக்குனர் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் மற்றொருபுறம் விசாரணையில் இறங்கி உள்ளனர். இவர்களின் விசாரணையில் வல்லம் வட்டார வேளாண்மை அதிகாரிகள் சாவித்திரி ஆஷா ஒப்பந்த ஊழியர்கள் பாலகிருஷ்ணன், பாரி பிரகாஷ், புஷ்பராஜ், வெங்கடேசன், மாயவன், பழனி, குமார் உட்பட 9 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரும் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் நாலு பேரும் ரிஷிவந்தியத்தில் மூன்று பேர் உட்பட தனியார் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர்கள் உட்பட ஒன்பது பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முகையூர் வட்டார வேளாண்மை வட்டாரத்தில் அங்குள்ள பயிர் பரிசோதனை அலுவலர்களான ராஜ்குமார், வீரன் அண்ணாமலை, வேல்முருகன், கிருபானந்தம், சுஜிதா ஆகியோரை பணி நீக்கம் செய்துள்ளனர்.
வேளாண்மைத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தனியார் கம்ப்யூட்டர் சென்டர் நடத்துபவர்களிடம் போலீசார் விசாரணை செய்ய, “வேளாண் துறை அதிகாரிகள் அலுவலர்கள் எங்களிடம் ஒரு லிஸ்டை கொடுத்து கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய சொல்வார்கள் அதைத்தான் நாங்கள் செய்கிறோம் இந்த பணி செய்வதற்கு எங்களுக்கு நாளொன்றுக்கு 200 முதல் 300 ரூபாய் வரை சம்பளம் கொடுப்பார்கள். எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது” என சிபிசிஐடி போலீஸாரிடம் கூறியுள்ளனர்.