எட்டாம் வகுப்பு மாணவி நேத்ரா ஸ்ரீநிதி என்பவர் குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது.
நாகை அடுத்துள்ள தெத்தி சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் நேத்ரா ஸ்ரீநிதி(14). இவர் நாகையில் உள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கணித பாடத்தில் காலாண்டுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருக்கிறார். இதனால் எட்டாம் வகுப்பு ஆசிரியர் இந்திரகுமார் என்பவர் நேற்று முன்தினம் பெற்றோரிடம் தேர்வு விடைத்தாளில் கையெழுத்து வாங்கி வரச் சொல்லி அனுப்பியிருக்கிறார்.
இதையடுத்து, தனது தேர்வு விடைத்தாளில் உள்ள மதிப்பெண்ணை திருத்தம் செய்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டுபிடித்த ஆசிரியர் இந்திரகுமார் சக மாணவிகள் முன்னிலையில் நேத்ரா ஸ்ரீமதியை திட்டியதாகக் கூறப்படுகிறது. அதோடு அந்த மாணவியின் பெற்றோரிடமும் செல்போன் மூலம் ஆசிரியர் புகார் தெரிவித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி நேத்ரா ஸ்ரீநிதி பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லும்போது வீட்டின் அருகே உள்ள குளத்தின் கரையில் தனது புத்தகப் பையை வைத்துவிட்டு தண்ணீரில் குதித்துள்ளார். இதைப் பார்த்து அப்பகுதியில் சென்றவர்கள் கூச்சலிடவே அருகிலிருந்த இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கிய மாணவியை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து மாதவன் கொடுத்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். நேத்ரா ஸ்ரீநிதி இறப்புக்கு ஆசிரியர் இந்திரகுமார் தான் காரணம் எனவும், அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர். இதனால் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி வேணுகோபால், டிஎஸ்பி பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பாகுபாடு இன்றி விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து உறவினர்கள் நேத்ரா ஸ்ரீநிதியின் உடலைப் பெற்று அடக்கம் செய்தனர்.