Skip to main content

டிராக்டரில் சிக்கிய 8 வயது சிறுவன்; தந்தை கண் முன்னே நிகழ்ந்த சோகம் 

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
8-year-old boy trapped in tractor; The tragedy that happened before the eyes of the father

விவசாய நிலத்தை உழுத பொழுது தந்தையின் கண் முன்னே டிராக்டரில் சிக்கி எட்டு வயது சிறுவன் உயிரிழந்தது வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள குக்கலப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர்கள் தாமோதரன்-கவிதா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூன்றாம் வகுப்பு படித்து வந்த இளைய மகன் பரத்குமார் (8 வயது) இன்று விடுமுறை தினம் என்பதால் தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது தாமோதரனுக்கு சொந்தமான நிலத்தில் வேர்க்கடலை பயிரிடுவதற்காக ஆதிகேசவன் என்பவர் டிராக்டர் மூலம் நிலத்தை உழுது கொண்டிருந்தார்.

திடீரென எதிர்பாராத விதமாக டிராக்டரி பின்புற பகுதியில் சிறுவன் பரத்குமார் எறியுள்ளார். அதனை பார்க்காமல் டிராக்டர் இயக்கப்பட்டதில் சிறுவன் டிராக்டரில் சிக்கி சிறுவன் பரத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தந்தையின் கண் முன்னே எட்டு வயது சிறுவன் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து இலத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு; குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
NEET exam question paper leak School owner arrested in Gujarat

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதியதாக ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் முறைகேடு தொடர்ந்து எதிரொலித்து வரும் நிலையில் சிபிஐ விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியின் உரிமையாளர் தீக்சித் படேலை சிபிஐ கைது செய்துள்ளது. இவரது பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஜார்க்கண்டில்  உள்ள பள்ளி ஒன்றின் முதல்வர் அசானுல் ஹக், அப்பள்ளியின் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோரை சிபிஐ கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தனியார் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து; 20 பேர் காயம்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Private bus overturned accident; 20 people were injured

புதுக்கோட்டையில் தனியார் பேருந்து கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு மணப்பாறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அன்னவாசல் பகுதிக்கு முன்பாக உள்ள ஒன்றிய அலுவலக பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது பேருந்தின் முன்பக்கம் டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவில் குறுக்காக தலைகுப்புற கவிழ்ந்தது. அந்தப் பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அலறியடித்தபடி உள்ளே சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அன்னவாசல், இலுப்பூர், மணப்பாறை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து தகவல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு காவல்துறை வரவில்லை என அந்தப் பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அதேபோல் பேருந்து அதிவேகமாக வந்ததால்தான் இந்த விபத்து நடந்தது என அங்குள்ள ஒரு சாரார் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.