பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பலி!
பொறையார் அரசு போக்குவரத்து பணிமனையைச் சேர்ந்த போக்குவரத்துக் கழக ஊழியர் ஓய்வு அறை கட்டடத்தின் மேற்கூரை நள்ளிரவில் இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரில் பழமையான அரசு போக்குவரத்து பணிமனைக் கட்டடம் உள்ளது. 150க்கும் அதிகமான ஊழியர்கள் வேலைபார்த்து வருகின்றனர். சிலசமயங்களில் இரவு நேரங்களில் பணிமனையிலேயே தொழிலாளர்கள் தங்கவும் செய்வார்கள். அப்படி இரவு தங்கிய நிலையில், பணிமனைக்கழக ஊழியர்களின் ஓய்வு அறையின் மேற்கூரை திடீரென நள்ளிரவு 3.40 மணிக்கு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் அன்பரசன், மணிவண்ணன், தனபால், சந்திரசேகர், முனியப்பன், பாலு, ராமலிங்கம் ஆகிய 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், கட்டட இடிபாடுகளில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய செந்தில்குமார், வெங்கடேசன், பிரேம்குமார் ஆகிய 3 பேர் படுகாயங்களோடு காரைக்கால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் வெங்கடேசன் என்பவர் மிகவும் மோசமான நிலமையில் இருக்கிறார்.
இறந்தவர்களின் உறவினர்களும் சகதொழிலாளர்களும் மருத்துவமனையில் கூடியுள்ளனர். அங்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை எம்.பி., பாரதிமோகன், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் ஆகியோரை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். உரிய நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய வேலை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மருத்துவமனையில் அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக திமுக தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் உள்ளனர்.
விபத்து குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுகையில், விபத்து குறித்து முதல்வரிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிவாரணம் குறித்து முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார் தமிழகத்தில் பழைய கட்டடங்களில் இயங்கும் பணிமனைகள் அகற்றப்படும் எனறு தெரிவித்துள்ளார்.
- க.செல்வகுமார்