வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அந்த வகையில், சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடிய விடிய பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் சராசரியாக 9.88 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் சென்னை ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, அம்பத்தூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் நான்கும், சென்னைக்கு வருகை தர வேண்டிய விமானங்கள் நான்கும் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்று (30.11.2023) காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து சேலம் செல்ல இருந்த விமானம், காலை 10.15 மணிக்கு சென்னையில் இருந்து அபுதாபி செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு ஆந்திரா மாநிலம் கர்னூல் செல்லும் இண்டிகோ விமானம் உள்ளிட்ட 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.