கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் இதுவரை 67 நபர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சமய் சிங் மீனா உட்பட ஒன்பது பேரை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தைக் கண்காணிக்கத் தவறியதாகவும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் கூறி கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், ராஜேந்திரன் மற்றும் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கச்சிராயபாளையம் உள்ளிட்ட நான்கு காவல்நிலையங்களில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு காவலர்கள் உள்ளிட்ட ஏழு பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வடக்கு மண்டல ஐஜி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து விழுப்புரம் டிஐஜி திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி உட்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்ரமணியன் மற்றும் திருக்கோவிலூர் உட்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் சின்னசேலம் தனிப்பிரிவு காவலர் சரவணன், கச்சிராயபாளையம் தனிப்பிரிவு காவலர் கணேஷ், சங்கராபுரம் தனிப்பிரிவு காவலர் சிவஜோதி மற்றும் கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு காவலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏழு தனிப்பிரிவு காவலர்களைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.