வனவிலங்கு சட்டப்படி மான்களை வேட்டையாடவும் கூடாது. அதன் கறி கைப்பற்றப்பட்டால் அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். ஆனால், இதனையெல்லாம் சிலர் கண்டுகொள்ளாமல் மான்களை வேட்டையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை நெல்லை மாவட்டத்தின் பாப்பாக்குடி எஸ்.ஐ. ஆபிரகாம், காவலர் முத்துராஜ் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையிலிருந்தபோது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டிருக்கிறார்கள். அப்போது காரினுள்ளே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மான், 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள், கத்தி, இரவு நேரத்தில் பயன்படுத்தப்படுகிற ஹெட்லைட் உள்ளிட்டவை இருப்பதைக் கண்டு காரில் இருந்தவர்களை ஸ்டேஷன் கொண்டு வந்து விசாரித்திருக்கிறார்கள். இதில் அவர்கள் பாப்பாக்குடி அருகேயுள்ள பனையங்குறிச்சி பகுதியில் துப்பாக்கியால் மானை வேட்டையாடியது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் நெல்லை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, வனச்சரகர் சரவணக்குமார் தலைமையிலான வனத்துறையினர் காவல்நிவையத்திற்கு வந்து வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள், கார், இறந்த மான் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மானை வேட்டையாடியதாக கல்லூரைச் சேர்ந்த ராமையா, சேரன்மகாதேவி குமார், ரமேஷ், ஊத்துமலை கிருஷ்ணா, உசிலம்பட்டியின் யோஸ்வராஜ், வாடிப்பட்டி போவாஸ், கோபிசெட்டிபாளையம் பிரகாஷ் ஆகிய 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் பல ஆண்டுகளாக கறிக்காக மான்களை வேட்டையாடியது தெரியவந்திருக்கிறது. மேலும் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது 2 வயது மதிக்கத்தக்க பெண் மான் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். மேலும் தகவலறிய பிடிபட்ட 7 பேரையும் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர் வனத்துறையினர்.