சேலத்தில், பார்சல் புக்கிங் செய்ததில் எடை அளவைக் குறைத்து காண்பித்து, 7 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக தபால்துறை ஊழியர்கள் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் ஜங்ஷன் ரயில்நிலையத்தில் தபால்துறை சார்பில், ஆர்.எம்.எஸ். பார்சல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் அண்மையில், துறை ரீதியான தணிக்கை நடந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2018ஆம் ஆண்டு மே மாதம் வரை, பார்சல் புக்கிங் செய்ததில் முறைகேடுகள் நடந்திருப்பது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் பார்சல்களை மட்டும் எடை அளவைக் குறைத்து பதிவு செய்து, 7 லட்சம் ரூபாய் வரை முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சேலம் ஆர்.எம்.எஸ். உதவி தபால் கண்காணிப்பாளர் பாலாஜி, சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் பணியாற்றிய அனிதாகுமாரி, சண்முகப்பிரியா, சக்தி, ராஜகோபால், சுதர்சன் ஆகியோருக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது காவல்துறை விசாரணையில் உறுதியானது. இதையடுத்து இவர்கள் 5 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறை விசாரணை ஒருபுறம் இருக்க, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.