பொதுவாக அரசுப் பணியில் கடைநிலை ஊழியர்களாகச் சேருபவர்கள் தங்கள் நன்னடத்தை மற்றும் பணிக்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் படிப்படியாகப் பதவி உயர்வு பெறுவார்கள். இதுதான் பொதுவாக அரசின் நடைமுறை. இது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் ஏழு துணை வட்டாட்சியர்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதோடு 40 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வருவாய்த்துறையில், வருவாய் ஆய்வாளர் பணிக்கு குரூப் 2 தேர்வு நடத்தி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேரடியாகப் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். இதில் தேர்ச்சி அடைந்தவர்கள் பட்டப் படிப்பினை தகுதியாகக் கொண்டவர்கள். இதன்படி 1995 ஆம் ஆண்டு அரசாணை 133ன் படி நேரடியாக வருவாய் அலுவலராகப் பணி நியமனம் பெற்றவர்களுக்குப் பட்டதாரிகள் அடிப்படையில் பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த நிலையில் இதை எதிர்த்து பட்டதாரி அல்லாத வருவாய்த்துறை அலுவலர்கள் வழக்கு தொடர்ந்தனர். இது சம்பந்தமான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், வருவாய் ஆய்வாளர்களுக்கு பணிக்கால முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது செல்லும், நேரடி நியமனம் அல்லாத வருவாய் ஆய்வாளர்கள் பட்டப்படிப்பு படித்து முடித்து இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு, இந்த உத்தரவை அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் ஏழு துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்களாகப் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மேலும் 33 துணை வட்டாட்சியர்களைப் பணி இடம் மாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் 30 வருவாய் ஆய்வாளர்களையும் இடமாற்றம் செய்துள்ளனர். பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ள ஏழு துணை வட்டாட்சியர்களும் உரிய கல்வித் தகுதி அடிப்படையில் இல்லை என்றும் பணி மூப்பு அடிப்படையில் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி வருவாய்த்துறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.