தேனி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை வரை வாரம் மூன்று முறை இயக்கப்பட்டு வந்த அதிவேக சூப்பர் பாக்ஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீடித்தும் ரயில்வே துறை அனுமதி அளித்தது. போடி வரை நீடிக்கப்பட்ட ரயில் சேவைகள் தொடக்க விழா போடி ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது.
இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் முருகன் கலந்து கொண்டு போடியிலிருந்து மதுரை பயணிகள் ரயில் மற்றும் போடி முதல் சென்னை சென்ட்ரல் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய இரண்டு ரயில் சேவையும் தொடங்கி வைத்தார். நேற்று இரவு 8:30 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், அதைத் தொடர்ந்து மதுரைக்கு செல்லும் ரயிலையும் மத்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., எம்.பி. ரவீந்திரநாத் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். அந்த ரயில்களில் பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.
இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் முருகன் பேசும்போது, “போடி ரயிலை பார்ப்பதற்காக திரண்டு வந்திருக்கின்ற மக்கள் முகத்தில் சந்தோஷத்தை பார்க்கும் போது இந்த ரயிலை எதிர்நோக்கி எவ்வளவு காத்திருந்தீர்கள் என்பதை உணர முடிகிறது. போடி ரயில் நிலையம் மிகவும் பழமையான ரயில் நிலையம். 1900 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே இந்த ரயில் நிலையம் செயல்பட்டது. இந்த அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க 2019 ஆம் ஆண்டில் 400 கோடி ரூபாயை பிரதமர் மோடி ஒதுக்கீடு செய்தார். கிருத்திகையான இந்த நல்ல நாளில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருக்கிறது. நம் நாட்டிற்கு மிகச் சிறந்த ரெயில்வே மந்திரி கிடைத்து இருக்கிறார். சமீபத்தில் ஒடிசாவில் மிகப்பெரிய ரயில் விபத்து நடந்தது. அங்கு விரைந்து சென்ற ரயில்வே மந்திரி அஸ்வின் வைஷ்ணவ் கிட்டத்தட்ட 51 மணி நேரம் அங்கேயே இருந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்கி வைத்தார்.
அந்த அளவுக்கு அவர் திறமையான ரயில்வே மந்திரி. இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு மட்டும் ரூ.6,080 கோடியை அவர் ஒதுக்கீடு செய்திருக்கிறார். அவர், தமிழகத்தில் 71 ரயில் நிலையங்களை சர்வதேச தரத்தில் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளார். குறிப்பாக ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, சென்னை உள்பட 5 ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.1,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 புதிய வழித்தடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. போடிக்கு மீண்டும் ரெயில் சேவை தொடங்க முயற்சிகள் மேற்கொண்ட இந்த தொகுதியின் எம்.பி. ப. ரவீந்திரநாத், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.
விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசும்போது, “ஒரு இயக்கத்தில் விசுவாசமாக இருந்தால் உறுதியாக உயர்வு கிடைக்கும் என்பதற்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் உதாரணம். போடி ரயில் நிலையம் பழமையானது. இதை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்ட பணிகள் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு வேகம் எடுத்தது. அதற்கு ப. ரவீந்திரநாத் எம்.பி. நிறைய முயற்சிகள் மேற்கொண்டார். அவருக்கு என் பாராட்டுகள். இனிமேல் இங்கு விளையும் பொருட்களை பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்று அதிக வருவாய் ஈட்டலாம். நாம் இந்த மாவட்டத்தின் வர்த்தகத்திற்கு புதிய அடிக்கல் நாட்டியிருக்கிறோம். இந்த அறிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், தேனி எம்.பி.க்கும் இந்த மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து ரவீந்திரநாத் எம்.பி. பேசும்போது, “நான் 2019 ஆம் ஆண்டு தேனி எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்தபோது இந்த ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உறுதி எடுத்தேன். பிரதமர் நரேந்திர மோடியை முதல் முறை சந்தித்து ஆசி பெற்றபோது போடி அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்குமாறு கோரிக்கை வைத்தேன். அவர் உடனடியாக தனது செயலாளரை அழைத்து அதை குறித்துக் கொள்ள சொன்னார். உடனடியாக மத்திய ரயில்வே மந்திரியிடம் இந்த திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறி நடவடிக்கை எடுக்கச் சொன்னார். இதையடுத்து இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து வேகமாக பணிகள் நடந்தன. திடீரென கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுத்திய போதிலும் இந்த ரயில்வே திட்டப் பணிகள் தொய்வின்றி நடந்தன. இப்போது போடியில் இருந்து சென்னைக்கு ரயில் சேவை தொடங்கி இருப்பது சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கூறினார்.
இந்த விழா நடந்த ரயில் நிலையப் பகுதிகள் மற்றும் ரயில் நிலையம் செல்லும் வழிகளிலும் ஏராளமான வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதோடு போடி நகரமே ரயில் சேவையை முன்னிட்டு விழாக் கோலமாக இருந்தது.