சென்னை வியாசர்பாடிக்கு அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு 50 வயதாகிறது. இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஆறுமுகம் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனிடையே, மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்துவந்த செல்வி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து தனது பிள்ளைகளை காப்பாற்றி வந்துள்ளார்.
இதற்கிடையில், செல்விக்கு புளியந்தோப்பு கனகராயத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான சுப்ரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஒருகட்டத்தில் திருமணத்தை மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்தனர். நாளுக்கு நாள் இவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம் அதிகரிக்கவே சுப்ரமணியும் செல்வியும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். அதே நேரம், சுப்பிரமணிக்கு ஏற்கனவே திருமணமாகி தனியாக குடும்பம் உள்ளது. இருந்தபோதும் சுப்பிரமணி செல்வியுடன் தொடர்ந்து பழக்கத்தில் இருந்து வந்துள்ளார்.
இத்தகைய சூழலில், செல்வியின் பிள்ளைகள் பெரியவர்களாக வளர்த்துவிட்ட நிலையில் தாயின் திருமணத்தை மீறிய உறவு அவர்களுக்குக் கோபத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒருகட்டத்தில், இதனைப் புரிந்துகொண்ட செல்வி சுப்பிரமணியுடன் பழகுவதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தியுள்ளார். அதன்பிறகு, இனிமேல் வரவேண்டாம் எனக் கூறிய செல்வி சுப்பிரமணியுடன் பேசுவதை முழுவதுமாக நிறுத்திக்கொண்டார். ஆனால், சுப்பிரமணி செல்வியுடன் பேசத் தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க செல்வி தனது மகளை கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தனது மகளை பார்ப்பதற்காக செல்வி ஓட்டேரி பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 26 ஆம் தேதி செல்வி தனது மகள் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இந்த தகவலை அறிந்த சுப்பிரமணி மதியம் 2 மணியளவில் செல்வியின் மகள் வீட்டிற்கு வந்து செல்வியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இருவரும் மீண்டும் கணவன், மனைவி போல சேர்ந்து வாழலாம் என சுப்பிரமணி கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த செல்வி, "இதெல்லாம் சரியா வராது. பசங்கெல்லாம் தோளுக்கு மேல வளந்துட்டாங்க. நீங்க உங்க வழிய பார்த்துக்கோங்க" எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சுப்பிரமணி, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து செல்வியின் தலையில் ஊற்றி தீ வைத்துள்ளார்.
தீப்பற்றி எரிய ஆரம்பித்ததும் செல்வி அலறியடித்து அங்கும் இங்குமாக ஓடியுள்ளார். இதில் சுப்பிரமணி மீது பெட்ரோல் பட்டு, அவர் மீதும் தீ பற்றியதால் இருவரும் தீயில் எரிந்துள்ளனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த செல்வியின் மருமகன் தனது மாமியார் செல்வியின் தீயை அணைக்க முற்பட்டார். அப்போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. பின்னர், இவர்களுடைய சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து, 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு செல்வி 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுப்பிரமணி மற்றும் செல்வியின் மருமகன் ஆகிய இருவரும் 40 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகாத உறவு விவகாரத்தில் 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.