
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என 2012ல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், பணியில் சேர மீண்டும் போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசாணை எண் 149 வெளியிடப்பட்டது. இதற்கு டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உட்பட ஆசிரியர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்குப் படிப்படியாகப் பணி வழங்கப்படும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர் பணி நியமனம் நடக்கவில்லை. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 222 ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படும் எனக் கடந்த வாரம் அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்தப் போட்டித் தேர்வுக்கு நேற்று முதல் (புதன்கிழமை) வரும் நவம்பர் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதற்கு டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாகத் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம் என்று கூறி கண்டனம் தெரிவித்தனர்.
இதை அடுத்து 2013 டெட் ஒருங்கிணைப்பாளர் நலச்சங்கம் சார்பில் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து அரசாணை 149 நீக்கப்படும் என அரசு தரப்பில் சொல்லப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்க நிர்வாகிகளைச் சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதை அடுத்து அடுத்த கட்டமாக நவம்பர் 1ம் தேதி ஈரோட்டில் மாபெரும் போராட்டம் நடத்தப் போவதாக 2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் நலச் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். தமிழகம் முழுவதும் இருந்து இதில் ஆசிரியர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என அவர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வடிவேல் சுந்தர், இளங்கோ ஆகியோர் தலைமையில் நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தனர். பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே ஒரு தரப்பினரும், பெருந்துறை புது பஸ் நிலையம் அருகே ஒரு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்திற்குத் திரண்டு வந்திருந்தனர்.
அப்போது ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த பெருந்துறை போலீசார் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த உங்களுக்கு அனுமதி இல்லை. மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினர். இதனை ஏற்று பெரும்பாலான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாமல் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பெருந்துறை போலீசார் கைது செய்து துடுப்பதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின் விடுதலை செய்தனர்.