Skip to main content

வருமான வரி சோதனைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுக!!! -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Published on 24/09/2018 | Edited on 24/09/2018

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில், 2018 செப்டம்பர் 22-24 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றைய (25.09.2018) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

 

CPI (M)



 

தீர்மானம் - 1

ஊழல் புகார்களில் சிக்கியுள்ள தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உடனடியாக பதவி விலக வேண்டும்

வருமான வரி சோதனைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுக!

சமீப மாதங்களாக தமிழக முதல்வர், துணை முதல்வர், சில அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவர்களின் தொடர்புடைய இடங்களில் அவ்வப்போது வருமானவரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, ரெய்டுகளும் நடக்கின்றன. முதல்வர், துணை முதல்வர் மீது சொத்துக் குவிப்பு குறித்த வழக்கு பதிவாகி விசாரணை நடைபெறுகிற நிலை உருவாகியுள்ளது.
 

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஒப்பந்த நிறுவனத்தில் நடைபெற்ற ரெய்டுகளில் பெருமளவு பணமும், தங்கமும், பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிறுவனம் முதலமைச்சரின் உறவினர்களோடு தொடர்புடைய நிறுவனம் என்ற செய்திகளும் வந்தன.
 

சென்னை குட்கா நிறுவனத்தில் நடந்த ரெய்டில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், காவல்துறை தலைவர், முன்னாள் காவல்துறை சென்னை ஆணையர் உள்ளிட்டவர்களுக்கு கோடிக்கணக்கில் மாமூல் கொடுத்துள்ளது வெளியாகியுள்ளது.
 

தமிழக சத்துணவு திட்டத்திற்கு பருப்பு சப்ளை செய்யும் கிறிஸ்டியன் நிறுவனத்தில் நடைபெற்ற ரெய்டில் முறைகேடுகளும், கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பும், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன. தொடர்ச்சியான வருமான வரி சோதனைகள் நடைபெற்ற போது  பலநூறு கோடி பணம், சொத்து குறித்த ஆவணங்களும், தங்கமும், கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்த போது ஒருவர் மீது கூட வழக்கு பதிவு செய்ததாகவோ, கைது செய்யப்பட்டதாகவோ தெரியவில்லை. இந்நிறுவனங்களின் மீது தொடர் நடவடிக்கை என்ன ஆனது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையினை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
 

ஆளும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் மீது லஞ்ச - ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இவர்கள் இனியும் பதவிகளில் நீடிப்பதை ஏற்க முடியாது. இவர்களின் மீதான விசாரணைகள் நியாயமாக நடைபெற வேண்டுமானால்  புகார்களில் சிக்கியுள்ள அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டுமெனமெனவும், அரசியல் தலையீடுகள் ஏதுமின்றி நேர்மையான விசாரணை நடத்தப்பட  வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
 

தீர்மானம் - 2

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை களைந்திடுக

 

கிராமப்புற மக்கள் வறுமை ஒழிப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டது தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டமாகும். இத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்தாமல், சட்டக்கூலியை முழுமையாக வழங்காமல் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம், இத்திட்டம் சிதைக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.
 

விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயத்தின் மூலம் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வேலைகள் மிகவும் குறைந்து விட்ட இச்சூழலில், அவர்களுக்கு ஓரளவு ஆதரவளித்து வந்தது இத்திட்டமாகும். ஆனால் மத்திய அரசும்,  மாநில அரசும் பல வாய்மொழி உத்தரவுகளாலும், அரசாணைகளாலும் இத்திட்டத்தின் பலன்களை கிராமப்புற தொழிலாளர்கள் முழுமையாக பெற முடியாத நிலையை உருவாக்கியுள்ளனர். வேலையின் தன்மையை மாற்றி, வீடு கட்டும் திட்டம், கழிப்பறை கட்டும் திட்டம், மரக்கன்றுகள் நடுவதற்கு என சுருக்கி 10 பேர் 20 பேருக்குத் தான் வேலை என குறைத்து வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

அத்தோடு, மத்திய அரசின் வழிகாட்டுதலுடன், மாநில அரசு இத்திட்டத்தின் செயல்பாட்டிலும் சட்டத்திற்குப் புறம்பாக ஏராளமான மாறுதல்களை செய்து நடைமுறைப்படுத்துகிறது. தொழிலாளர்களின் கூலி விகிதம் 60 சதவிகிதமாகவும், பொருள்கள் செலவினம் 40 சதவிகிதமாகவும் சட்டத்தில் உள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் பொருள்கள் செலவினம் 40 சதவிகிதத்தை தாண்டக் கூடாது என சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு கடந்த 2018 ஜனவரி 5ம் தேதி போட்ட அரசாணைகள் 5,6 மற்றும் 7ல் பொருள்கள் செலவினத்தை 83 சதவிகிதம் முதல் 93 சதவிகிதம் வரை உயர்த்தியும், தொழிலாளர்களின் கூலி விகிதத்தை 60 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதம் வரை குறைத்தும் அறிவித்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
 

மேலும், இச்சட்டத்தின் விதிகளுக்கு மாறாக, ஒப்பந்ததாரர்களையும், எந்திரங்களையும் திட்டத்தில் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இது விவசாயத் தொழிலாளர்களின் வேலையை அப்பட்டமாக பறிப்பதாகும்.
 

ஆகவே, தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் வேலை கோரும் தொழிலாளர்களுக்கு முழு அளவில் வேலை அளிக்கவும், சட்டக்கூலி ரூ. 224ஐ முழுமையாக அமல்படுத்தவும், திட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் போடப்பட்டுள்ள உத்தரவுகளைத் திரும்பப் பெறவும், தற்போது உள்ள விலைவாசிக்கேற்ப சட்டக்கூலியை ரூ. 500/- ஆக உயர்த்திடவும், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வாழும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையளிக்கும் வகையில்  உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டுமெனவும்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
 

தீர்மானம் 3

போக்குவரத்துக் கழகங்களில் நடத்துனர் பதவியை ஒழிக்கும் தமிழக அரசின் சட்டத்திருத்த நடவடிக்கையை கைவிடுக
 

தமிழகத்தில் சுமார் 30000 அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி கொண்டிருக்கின்றன. இவற்றில் சுமார் 1 லட்சம் பேர் நடத்துனராக பணிபுரிந்து வருகின்றனர்.
 

பயணிகள் பேருந்தில் நடத்துனர் பணி என்பது முக்கியமான பணியாகும். பயணிகளுக்கு பயணச் சீட்டு வழங்குவது மட்டுமின்றி பாதுகாப்பாக பயணிகளை கொண்டு செல்வது, பயணத்தின் போது பயணிகளுக்கு உதவுவது போன்ற பணிகளையும் நடத்துனர் செய்ய வேண்டும்.
 

ஆனால் சமீப காலத்தில் நடத்துனர் இல்லாத பேருந்துகளை போக்குவரத்து கழக நிர்வாகங்கள் இயக்கி வருகின்றன. இப்பேருந்துகளில் ஓடும் போது பயணி இறங்க முயற்சித்து மரணமடைந்தது, விபத்து, பயணத் தடை ஏற்பட்ட போது பயணிகள் நடுரோட்டில் நிற்பது போன்ற பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சில பேருந்துகளில் பயணிகளுக்கு மத்தியில் சச்சரவு ஏற்படும் சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன.
 

மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின் படி பயணிகள் பேருந்துகளில் நடத்துனர் இல்லாமல் இயக்கப்படக் கூடாது. எனவே இதற்கு எதிராக நீதிமன்ற வழக்குகள்நடைபெற்று வருகிறது.
 

தற்போது தமிழக அரசு பயணிகள் பேருந்தில் நடத்துனர் பணியை ஒழிக்கும் அடிப்படையில் மோட்டார் வாகன சட்ட விதிகளில் திருத்தம் செய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசின் இந்நடவடிக்கை மூலம் பல்லாயிரக்கணக்கான நடத்துனர்கள் பணியிழக்கும்அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நடத்துனர் உரிமம் பெற்று வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையும் பறிக்கப்படுகிறது. போக்குவரத்துக் கழகங்களின் செலவை குறைப்பது என்ற நோக்கத்துடனேயே அரசு சட்டத் திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழகஅரசின் இந்நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநிலக்குழு வன்மையாக கண்டிப்பதுடன் தமிழகஅரசு சட்டத் திருத்த நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறது.
 

தீர்மானம் 4

தீண்டாமைக்கு எதிரான நேரடிக் களப்போராட்டங்களை வெற்றிபெறச் செய்வீர்
 

சாணிப்பால், சவுக்கடி கொடுமைக்கு சாவுமணி அடித்த செங்கொடி இயக்கத்தின் வீரப்புதல்வன் தோழர் பி. சீனிவாசராவ் நினைவு தினத்தையொட்டி செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தினங்களில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான நேரடிக் களப்போராட்டங்களை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்துகிறது.
 

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், தாயம்பாளையம் தலித் அருந்ததியர் மக்களுக்கு முடிதிருத்த மறுக்கப்படுவதை ஒழித்து தலித் அருந்ததியர் மக்களுடைய சமூக உரிமையை நிலைநாட்டவும், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஒரத்தூர் கிராமத்தில் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டமும்,
 

புதுக்கோட்டை மாவட்டம், அரிமலம் ஒன்றியம், நெடுங்குடி கிராமத்தில் குப்பை சேகரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ள தலித் மக்களின் மயான நிலத்தை மீட்க, அங்கே குப்பைக்கென்று அமைக்கப்பட்டுள்ள செட்டை அகற்றும் போராட்டமும்,
 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், மந்தை மாரியம்மன் கோவில் தெருவிலுள்ள 32 தலித் குடும்பங்களுக்கு 50 வருடமாக பட்டா வழங்கப்படவில்லை. நிலவுரிமைக்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டமும்,
 

தூத்துக்குடி மாவட்டம், படர்ந்த புலி கிராமத்தில் அருந்ததியர் குடியிருப்பு சாதிய துவசேத்துடன் மிகவும் தொலைவில் உள்ள ராமணூத்து ஊராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் உட்பட அனைத்து வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டமும்,
 

கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியம், வாரப்பட்டி கிராமத்தில் தலித் மக்களுக்கு பட்டாவுடன் வழங்கப்பட்ட நிலத்தைஅளந்து கொடுக்காமல் அலட்சியப்படுத்தும் அரசு நிர்வாகத்தை கண்டித்து முற்றுகைப் போராட்டமும்,
 

தருமபுரி மாவட்டம், அரூர் தொகுதி சிபிஎம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி. டில்லிபாபு தொகுதி மேம்பாட்டு நிதியில் அரூர், அம்பேத்கர் நகரில் கட்டி முடிக்கப்பட்ட சமூக நலக்கூடம் உள்நோக்கத்துடன் திறக்கப்படாமல் உள்ளது. மக்களைத் திரட்டி சமூக நலக் கூடத்தை திறக்கும் போராட்டமும் நடைபெறவுள்ளது.
 

தலித் மக்களின் சமூக உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திடும் இப்போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது முழுஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. இதனை வெற்றி பெறச்செய்திட அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.
 

தீர்மானம் - 5
 

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை அத்துமீறல் கண்டனம்
 

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை வட்டார வாலிபர் சங்கத்தின் இடைக்கமிட்டி மாநாடு 23.9.2018 அன்று நடத்துவதற்கான காவல்துறை அனுமதி கோரப்பட்டது. காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் குறிப்பிட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பிரதிநிதிகள் மாநாடு முடித்து பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வாலிபர் சங்க தோழர்கள் அமைதியாக எந்த பிரச்சனையுமின்றி கும்பலாக நடந்து சென்றனர். ஆனால், காவல்துறையினர் வேண்டுமென்றே திட்டமிட்டு ஏராளமான போலீசாரை வாலிபர் சங்க தோழர்களுடைய வீடுகளில் நிறுத்தி வைத்துள்ளனர். வாலிபர் சங்க இடைக்கமிட்டி செயலாளர் தோழர் எட்வின்பிரைட் அவர்களின் அண்ணன் எட்வின் சுரேஷை பணயக் கைதியாக, காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். மேலும் பல தோழர்களின் வீட்டு ஜன்னல்களை  அடித்து நொறுக்கி அராஜகம் செய்து வாலிபர் சங்கத் தோழர்கள் மீது திட்டமிட்டு பொய்வழக்குகளை புனைந்துள்ளனர். பொதுக்கூட்டம் நடந்த ஆலம்பாறை பகுதியில் ஒரு பதற்றமான நிலையை  உருவாக்கியுள்ளனர்.
 

காவல்துறையினரின் இந்த ஜனநாயக விரோதப்போக்கை வன்மையாக கண்டிப்பதுடன்,  பதியப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டுமெனவும், இதற்கு காரணமான மார்த்தாண்டம் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்