முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் அதே முறைப்படி தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எஞ்சியுள்ள ஆறு பேரையும் விடுவிக்க உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து நிவாரணங்களும் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ள 6 பேருக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை தொடர்பாக இன்று மதியம் வேலூர் மத்திய சிறைக்கும் வேலூர் பெண்கள் தனிச் சிறைக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகல் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 31 ஆண்டுகளுக்குப் பின் வேலூர் பெண்கள் தனிச்சிறையிலிருந்த நளினி விடுதலை செய்யப்பட்டார். பரோலில் இருந்த நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறைக்குச் சென்று தனது பரோலை ரத்து செய்ய கடிதம் வழங்கிய பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதே போல், புழல் சிறையிலிருந்து ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் இதற்கு முன் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த பேரறிவாளன், இன்று விடுதலையான ராபர்ட் மற்றும் ஜெயக்குமாரை வரவேற்பதற்காகப் புழல் சிறைக்குச் சென்றார். சிறையிலிருந்து வெளிவந்த ராபர்ட் பயாஸை கட்டியணைத்து வரவேற்ற பேரறிவாளன், அவருடன் சிறிது நேரம் உரையாடிய பின் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.