Skip to main content

அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 6 பேர் சரண்

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

6 people surrendered in AIADMK councilor case

 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலர் மதுரை பாலமேடு அருகில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்தக் கொலை தொடர்பாக 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பேரூராட்சி கவுன்சிலராக இருப்பவர் சந்திரபாண்டியன். இவர் அதிமுக சார்பில் நான்காவது முறையாகப் போட்டியிட்டுத் தொடர்ந்து வெற்றிபெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று மதுரை லிங்கவாடி பகுதியிலுள்ள தனது மகளைப் பார்ப்பதற்காகப் பாலமேடு வழியாக இருசக்கர வாகனத்தில் சந்திரபாண்டியன் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரை வழிமறித்த மர்ம கும்பல் பட்டப்பகலில் அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டுத் தப்பி ஓடியது.

 

ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்திரபாண்டியன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனடியாக இது குறித்த தகவல் பாலமேடு போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்தப் படுகொலை தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இந்நிலையில் இந்தக் கொலை தொடர்பாக மதுரை ஜெ.எம்-6 நீதிமன்றத்தில், வழக்கில் தேடப்பட்டு வந்த மவுத்தம்பட்டியைச் சேர்ந்த அபிஷேக், அழகர்சாமி, ரவிக்குமார், கரண், தளபதி, விஜயகுமார் உள்ளிட்ட 6 பேரும் சரணடைந்துள்ளனர். போலீசார் இந்த வழக்கில் நடத்திய விசாரணையில், கோவில் திருவிழாவில் நிகழ்ந்த மோதலால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்