சேலம் மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரி, துணை ஆணையர்கள் லாவண்யா, கவுதம் கோயல் ஆகியோர் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்போர், தொடர் குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாநகரில் நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான கடந்த 6 மாதத்தில் மட்டும் 63 பேர் குண்டர் சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ரவுடிகள் மட்டுமின்றி திருட்டு, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள், லாட்டரி, பாலியல் குற்றங்கள், ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களும் அடங்குவர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஓராண்டு வரை பிணையில் வெளியே வர முடியாது. அதேநேரம் கைதான நபர்கள் தங்கள் மீதான குண்டாஸ் நடவடிக்கை சரியானதா இல்லையா என்பது குறித்து நீதிபதி முன்னிலையில் செயல்படும் அறிவுரைக் கழகத்தின் (அட்வைசரி போர்டு) முன்பு வாதிட வாய்ப்பு உள்ளது. மாநகர காவல்துறையின் கெடுபிடிகளால், ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.