நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று (08/02/2022) நடைபெறுகிறது. மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் காலை 10.00 மணிக்கு சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடக்க உள்ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சட்டமன்றக் கூட்டம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 13- ஆம் தேதி அன்று நீட் தேர்வில் விலக்கு கோரி மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 142 நாட்களுக்கு பின் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த பிப்ரவரி 1- ஆம் தேதி அன்று சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5- ஆம் தேதி அன்று சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடக்கிறது.
11 ஆண்டுகளில் 5வது சிறப்பு சட்டமன்றக் கூட்டம்!
தமிழக சட்டமன்றத்தில் 11 ஆண்டுகளில் 5ஆவது முறையாக இன்று (08/02/2022) சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 2011- ஆம் ஆண்டு டிசம்பர் 15- ஆம் தேதி அன்று முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை நிலைநாட்ட தீர்மானம் நிறைவேறியது. இலங்கையில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதற்காக 2013- ஆம் ஆண்டு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கடந்த 2017- ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடையை நீக்கவும், 2018- ஆம் ஆண்டு மேகதாது அணை விவகாரத்துக்காக சிறப்பு கூட்டம் நடைபெற்றது.