புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் சர்வதேச நகரம் உதயமானதின் 50-ஆம் ஆண்டு பொன்விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை (25.02.2018) புதுச்சேரி வருகை தர உள்ளார். நாளை காலை 10.45 மணிக்கு விமானம் மூலம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வரும் மோடி, அங்கிருந்து கார் மூலம் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று தியானம் செய்கிறார்.
பிரதமர் வருகையொட்டி புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பா.ஜ.க பொதுக்கூட்டம் நடக்கும் லாஸ்பேட்டை மைதானம் பகுதியிலும் இரவு பகலாக காவலர்கள், உளவுத்துறையினர் தீவிரமான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பிரதமருக்காக குண்டு துளைக்காத கார் டெல்லியிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் 4 கம்பெனி துணை ராணுவமும் புதுச்சேரி வந்துள்ளது. கடலோர காவல் படையும் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே சிறுபான்மையினர் மீதான தாக்குதல், தமிழக விவசாயிகள் புறக்கணிப்பு, தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், மீத்தேன், ஹைட்ரோ ஹார்பன் திட்டங்கள் மூலம் தமிழக வாழ்வாதாரத்தை சிதைத்தல், சமூக நீதிக்கெதிரான நீட் தேர்வை திணித்தல், காவிரியில் துரோகம், மாநிலங்களுக்கான நிதி குறைப்பு என தமிழர்களுக்கெதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் போராட்டங்கள் நடைபெற்றன.
பெரியார் திராவிடர் விடுதலைக்கழகம் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் அலைகள் இயக்கம், தமிழ் தமிழர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தோர் கலந்து கொண்டு சர்வேதச ஆதிக்க நகரத்துக்கும், அரவிந்தர் ஆசிரமத்திற்கும் வருகை தரும் மோடிக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் அருகிலிருந்து கருப்பு கொடிகள் ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக ஆசிரமத்தை முற்றுகையிட முயன்ற 50-க்கு மேற்பட்டவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.