பல்வேறு இடங்களிலும் தலித்துகள் கோயிலுக்குள் வரக் கூடாது என்ற தீண்டாமை இன்றும் பல கிராமங்களில் உள்ளது. ஆனால் திருவரங்குளத்தில் ஆதிதிராவிடர்கள் தேரின் வடம் தொட்டுக் கொடுத்த பிறகே பக்தர்கள் தேரை இழுக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்ட பெரியநாயகி அம்பான் உடனுறை அரங்குளநாதர் (சிவன்) கோயில். இந்த கோயில் திருவிழா என்றால் பல்வேறு கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்துவிடுவார்கள். அதே போல மற்ற நாட்களை விட தேரோட்டத்திருவிழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் மாவட்டம் முழுவதும் இருந்து வருகிறார்கள்.
தேரோட்டத்தின் சிறப்பே அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தேரை அலங்காரம் செய்து வைத்த பிறகு வெள்ளை குடைப் பிடித்துக் கொண்டு பக்தர்களுக்கு விபூதி வழங்கிக் கொண்டே ஊர்வலமாக வரும் ஆதிதிராவிடர் மக்கள் வந்து தேரின் வடம் தொட்டுக் கொடுத்த பிறகே திரண்டிருக்கும் பக்தர்கள் தேரை இழுத்துச் செல்வார்கள்.
அப்படித் தான் இன்றும் ஆதிதிராவிடர்கள் தேரின் வடம் தொட்டு கொடுத்த பிறகே தேரோட்டம் தொடங்கி 4 வீதிகளிலும் சுற்றி வந்தது.
இந்த பழக்கம் காலங்காலமாக உள்ளது. அதனால் இந்த பழக்கத்தை மாற்றமாட்டோம். வழக்கமான முறையிலேயே தேரோட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றனர் பக்தர்கள்.