ஏடிஎம்மில் பணம் எடுத்துத் தரும்படி உதவி கேட்ட அப்பாவி பெண் ஒருவரை ஏமாற்றி இளைஞர் ஒருவர் 56,000 ரூபாயைத் திருடிச் சென்ற சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நிகழ்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ஒன்றில் செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம் கார்டை பயன்படுத்தத் தெரியாததால் அங்கிருந்த இளைஞர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார். இளைஞரும் உதவி செய்வதாக அவரிடமிருந்து ஏடிஎம் கார்டை பெற்று பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் இந்த ஏடிஎம்மில் பணம் வரவில்லை எனத் தெரிவித்துவிட்டு கலைச்செல்வியிடம் மீண்டும் ஏடிஎம் கார்டை ஒப்படைக்கும்போது மற்றொரு போலி கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு நைசாக அங்கிருந்து கிளம்பியுள்ளார். பின்னர் அந்தக் கணக்கிலிருந்து 56 ஆயிரம் ரூபாயை அந்த இளைஞர் வேறு ஒரு ஏடிஎம்மில் எடுத்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் கலைச்செல்வி புகாரளித்த நிலையில் குறிப்பிட்ட ஏடிஎம் மையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். காட்சிகளை அடிப்படையாக வைத்து மோசடியில் ஈடுபட்ட அந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.