ஈரோடு மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் இந்த உத்தரவை மீறி மது விற்பனை நடைபெறுகிறது என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தங்கள் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசாரின் தீவிர சோதனையில் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி மது விற்ற 54 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரே நாளில் 667 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.